தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறவிருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக தொடங்கப்படவிருந்த இந்த சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்க இருந்தார்.
திட்டத்தின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென இந்த விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விழா ரத்து செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’க்காக தயார் செய்யப்பட்டிருந்த புதிய வாகனங்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான புதிய சீருடைகள் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இந்த அதிரடிப்படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.