தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிவேகமாக வந்த மாருதி ஆம்னி வேனை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையில், வேனில் மூடை மூடையாக ரேஷன் அரிசி மறைத்து வைத்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மொத்தம் 50 கிலோ எடையுள்ள 22 மூடைகளில் 1,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும், அதில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் லட்சுமணன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லட்சுமணனை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், அவரிடம் இருந்து ரேஷன் அரிசி யாரிடம் வாங்கப்பட்டது, யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
