தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற த.வெ.க. கட்சி, பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10-ஆம் தேதி விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசில் 23 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த நிலையில், கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியான ப. ராஜ்குமார் எம்.எல்.ஏ., தேர்தல் களமே சூடுபிடிப்பதற்கு முன்பாகவே, தனது கட்சித் தலைவர் விஜய் முதல்-அமைச்சராகவும், தான் கடலூர் தொகுதி மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பேற்க வேண்டும் என வேண்டியதாகக் கூறப்படுகிறது. அவரது விருப்பப்படியே, இத்தேர்தலில் கட்சி மாபெரும் வெற்றி பெற்று விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தனது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக இந்தச் சிலைகளை அவர் வடிவமைத்துள்ளார்.
பாரம்பரிய முறைப்படி மண்ணால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தனது சிலைகளை அவர் ஒரு ஆலயத்தில் வைத்துள்ளார். ஆலயத்தில் அர்ச்சகர்கள் முன்னிலையில் சிலைகளுக்கு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மங்கள ஆரத்தியுடன் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வின் போது, கடலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடனிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தன் தலைவனின் வெற்றிக்காக மண் சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய கடலூர் தொகுதி எம்.எல்.ஏ ப. ராஜ்குமாரின் இந்தச் செயல், த.வெ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலயத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
