தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடையம் காவல் நிலைய வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவல் நிலைய சுற்றுச்சுவர் அருகே வளர்ந்திருந்த மூங்கில் மரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு, அது காய்ந்த மூங்கில் இலைகளில் பரவி, அங்கிருந்து அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் பற்றி எரிந்துள்ளது. இதனால், சுமார் 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தீ விபத்து ஏற்பட்டதும், காவல் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். எனினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், உடனடியாக ஆலங்குளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதனால், மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் சேதமடைந்த 89 மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கருகி எலும்புக்கூடுகளாக மாறிய பைக்குகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.