நடிகர் ரஜினிகாந்த், 'நான் பேச ஆரம்பித்தாலே அது ஒரு பிரச்சனையாக மாறிவிடுகிறது. அமைதியாக இருந்தால் 'ஏன் பேசவில்லை?' என்று கேட்கிறார்கள். பேசினால் 'இதை ஏன் பேசினார்?' என விமர்சிக்கிறார்கள்' என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தலைவர்173 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தன்னைச் சுற்றி எப்போதும் ஏதோ ஒரு பேச்சு இருந்து கொண்டே இருக்கும் என்றும், தான் பேச ஆரம்பித்தால் அது பிரச்சனையாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். அமைதியாக இருந்தால், 'என்ன பேசாமல் இருக்கிறார்?' என்று கிண்டல் செய்வார்கள் என்றும், பேசினால், 'இதை ஏன் பேசினார்?' என்று விமர்சிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
‘நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெறுப்பவர்கள் எப்போதும் வெறுப்பையே பரப்புவார்கள். அதேபோல், நம்மை நேசிப்பவர்கள் எல்லா நேரங்களிலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது’ என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்173 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'தர்மன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்க, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.