நெய்வேலி அருகே பிரபல ரவுடி கோபி, காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், ரவுடி கோபியின் காலில் குண்டு பாய்ந்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி, இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், நெய்வேலி அருகேயுள்ள புலவன்குப்பம் பகுதியில் பிரபல ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் அவரைப் பிடிக்க முயன்றபோது, ரவுடி கோபி காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும், தன்னிடம் இருந்த அரிவாளால் காவல்துறையினரைத் தாக்க முயன்றார். இதனால், தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், பிரபல ரவுடி கோபியின் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த என்கவுண்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின்போது ரவுடி கோபியின் அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர்களான பாண்டிய ராஜன் மற்றும் விஜயலசோழன் ஆகியோர் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
