சீரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் சிறந்த செரிமான சக்திதான். ஆனால், சீரகத்தின் நன்மைகள் செரிமானத்துடன் நின்றுவிடுவதில்லை. இது நம் எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால வயிற்று வலியையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சீரகத்தின் மற்ற நன்மைகளை விரிவாகக் காண்போம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்கும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதற்கும் சீரகம் ஒரு சிறந்த பொருளாக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமானத்தை சீராக்கி, உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. தொடர்ந்து சீரகத்தை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.
மேலும், சீரகம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைய உதவுகிறது. உணவில் சீரகத்தைச் சேர்த்துக்கொள்வதோடு, சீரக நீரையும் அருந்துவது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும் என்று பலர் கூறுகின்றனர். பல சத்துக்கள் நிறைந்த இந்த சீரக நீரைக் குடிப்பதால் உடல் எடை குறைகிறது.
சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. இது மிகக் குறைவான கலோரி அளவாகும். எனவே, இதனை அதிக அளவில் உட்கொள்ளலாம் அல்லது அருந்தலாம். மேலும், பசியை ஆற்றும் சக்தி சீரகத்திற்கு உண்டு. பசி அதிகமாக இருக்கும்போது சீரகத் தண்ணீரைப் பருகினால், பசி அடங்கும்; தேவையற்ற உணவுகளை உண்பதைத் தவிர்க்கலாம். இரவு உணவுக்குப் பிறகு சீரக நீர் அருந்தினால் செரிமானம் நன்றாக நடைபெறும். எனவே, சீரக நீரைத் தயாரித்து அவ்வப்போது தொடர்ந்து அருந்துவது மிகவும் நல்லது.