2026-27 கல்வியாண்டிற்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய இந்த விண்ணப்பப் பதிவில், இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 796 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதல் நாளில் 8,500 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
தற்போது வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 478 பேர் தங்களது சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி ஆகும்.
இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவும் www.tngasa.in என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விண்ணப்பப் பதிவின் கடைசி நாள் அடுத்த மாதம் 1-ந்தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 29-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 2, 3-ந்தேதிகளில் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகிறது.
