சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு பரிந்துரைகளுக்கு இணங்க இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில தாய்மொழி என இரண்டு மொழிகளை மட்டுமே படித்து வந்தனர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய நடைமுறையின்படி, மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியைத் தேர்வு செய்து, மொத்தம் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2026 ஏப்ரல் மாதம், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்ததை வரவேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயமாக்குவது 2029-30 கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்படும் எனத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம் மே 15, 2026 அன்று, சிபிஎஸ்இ அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்திற்குள் புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், முன்பே அறிவித்தபடி 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
