செய்யாறு அருகே, திருமணமான 6 மாதங்களிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் அடித்துக் கொன்றதாக பெண் வீட்டார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கங்காவின் மகன் ஜீவானந்தத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புத்தலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமிர்தலட்சுமியின் மகள் ஜீவலட்சுமிக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு, சில மாதங்களிலேயே கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஜீவலட்சுமியின் கணவர் ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், 'நீ மாற்று சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் தாய் வீட்டிற்குச் சென்று திருமண சீதனம் பெற்று வா' என்று கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் பேசி, வரதட்சணை விஷயத்தில் சுமுகமான சூழலை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜீவலட்சுமியின் தாய் அமிர்தலட்சுமிக்கு, ஆக்கூர் கிராமத்திலிருந்து தொலைபேசி மூலம், 'உங்கள் மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது' எனத் தகவல் வந்துள்ளது.
உடனடியாக ஆக்கூர் கிராமத்திற்கு விரைந்து சென்ற அமிர்தலட்சுமி மற்றும் உறவினர்கள், வீட்டில் ஜீவலட்சுமி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இது சந்தேக மரணம் எனப் புகார் அளித்து, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை, உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, 'காரணமானவர்களைக் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உறவினர்கள் செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் ஜீவானந்தத்தைக் கைது செய்ததைக் காண்பித்த பிறகு, சாலை மறியல் கைவிடப்பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.