தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் இருந்து 12 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, பணத்தை வழங்காமல் மோசடி செய்த வங்கி செயலாளர் மற்றும் எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நல்லையன், வைரக்கண்ணு, முருகேசன் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு தளிகைவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனித்தனியாக நகைகளை அடகு வைக்கச் சென்றுள்ளனர். அப்போது, வங்கி செயலாளர் செல்வராஜ் மற்றும் எழுத்தர் பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 12 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, மறுநாள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விவசாயிகள் மறுநாள் வங்கிக்குச் சென்று பணத்தைக் கேட்டபோது, அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், செல்வராஜ் மற்றும் பழனியப்பன் ஆகியோர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்றது. இதன் காரணமாக, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கூட்டுறவு வங்கி ஊழியர்களான செல்வராஜ் மற்றும் பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் பெற்ற நகைகளை தனிநபர் அடகுக் கடைகளில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
