தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினருக்கு, காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 10 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை அவர்கள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.
புதிய அரசு, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், இத்திட்டங்களின் வெற்றிக்கு ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. அவர்களின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்குப் பலம் சேர்க்கும்.
எனவே, இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறைவேற்றும் வகையில், ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
