தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் எங்கு சென்றாலும் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியை ஈட்டுவோம். முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றிதான். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கான த.வெ.க. வேட்பாளர்கள் வரும் 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்கள்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படவில்லை என்றும், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆகியவை உறுதியாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அரசு இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றியதே தற்காலிக தாமதத்திற்குக் காரணம் என்றும் அவர் விளக்கினார். விமர்சனங்களை வரவேற்பதாகவும், ஆனால் அவை நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாகவே உள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

