செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி, 2030ஆம் ஆண்டிற்குள் மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என 'கிளாட் ஏ.ஐ.' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட 'ஆந்த்ரோபிக்' நிறுவனம், 'கிளாட் ஏ.ஐ.' போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது.
'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தில் பணியாற்றி விலகிய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஜேக்கப் காக்சன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், 'ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள், 2030க்குள் ஏ.ஐ. மனிதர்களை அழித்துவிடும் என்பதை உண்மையாகவே நம்புகின்றனர்' என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்துடன் தான் பெருமளவில் உடன்படுவதாக 'ஆந்த்ரோபிக்' சி.இ.ஓ டாரியோ அமோடெய், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜேக்கப் காக்சன், 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தை விட்டு வெளியேறியபோது, 'இந்த நிறுவனம் மிகவும் பொறுப்புடனும், இந்தப் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தும் செயல்படுகிறது' என்று கூறியதாக அமோடெய் குறிப்பிட்டார். காக்சன், 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தை குறை கூறவில்லை என்றும், ஒட்டுமொத்த ஏ.ஐ. துறையின் வேகமான முன்னேற்றம் குறித்தே அவர் கவலை தெரிவித்ததாகவும் அமோடெய் விளக்கினார்.
ஏ.ஐ. மனிதர்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அதற்கு குறிப்பிட்ட சதவீதம் இல்லை என்றும், ஆனால் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பாதைகள் எங்கு செல்கின்றன என்பதை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். நாம் சரியான பாதையில் முன்னேறினால், தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும், மாறாக தவறான பாதையைத் தேர்வு செய்தால், அந்த வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும் அமோடெய் சுட்டிக்காட்டினார்.
எனவே, சரியான பாதையைத் தேர்வு செய்யும் மனிதர்களின் திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக ஏ.ஐ. துறையும், உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இத்துறையில் நாம் மிகவும் மெதுவாக முன்னேறினாலும், தவறான நபர்களின் கைகளில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் சென்றுவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், விபரீதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் டாரியோ அமோடெய் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
டாரியோ அமோடெய் கூறியுள்ள இந்தக் கருத்துக்களுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஓபன் ஏ.ஐ.' நிறுவனர் சாம் ஆல்ட்மேன் மற்றும் 'எக்ஸ் ஏ.ஐ.' நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சாம் ஆல்ட்மேன், தனது சமூக வலைதளப் பதிவில், 'முன்னணி ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் டாரியோவுடன் நான் உடன்படுகிறேன். இது தொடர்பாக 'ஓபன் ஏ.ஐ.'யில் சில வாரங்களாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. நிறுவனத்துடன் தொடர்பில்லாத சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை நியமிப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கும், 'டாரியோ சொல்வது சரிதான்' என்று தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தலைவர்களின் கருத்துக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த முக்கிய விவாதங்களை எழுப்பியுள்ளன.

