நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில், வங்கி நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றிருந்தால், வழக்கமான சனி மற்றும் ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து நான்கு நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், சுமார் 52 கோடி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், வங்கி நிர்வாகம் மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முன்னேற்றம் காணப்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மே 25 மற்றும் 26 தேதிகளில் எங்களின் அனைத்து வங்கி கிளைகளும் வழக்கம் போல் செயல்படும். வங்கி சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும்' என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவித தயக்கமும் இன்றி வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.