தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவிக்கு 3 அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்புதல் அளித்து பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அடுத்த தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ஜூனியரான வெங்கடராமன் பொறுப்பு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். பின்னர், தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக யுபிஎஸ்சி கூட்டத்தில் ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் மகேஷ் குமார் அகர்வால் (எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.
இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக முறைப்படி அறிவிக்கும். இதன் முடிவில்தான் தற்போதுள்ள பொறுப்பு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவரும். ஏற்கெனவே டிஜிபி பட்டியலில் சீமா அகர்வால், வன்னிய பெருமாள், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் பெயர்கள் இருந்தன. இதில் சீமா அகர்வால் அடுத்த மாதத்துடன் பணி ஓய்வுபெற உள்ளார்.