சென்னை: நடிகர் சசிகுமார், 'வதந்தி 2' என்ற புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சசிகுமார், 'இதுவரை சுமார் 30 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், என்னை யாரும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் யோசித்ததில்லை. 'வதந்தி 2' இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நம்ப முடியவில்லை. மதுரையைச் சேர்ந்த கதைகளில் எங்களை ரவுடிகளாகத்தான் காட்டுவார்கள். ஆனால், காவல் அதிகாரி கதாபாத்திரம் என்று இயக்குநர் கூறியதும் கதையைக் கேட்க ஆரம்பித்தேன்' என்றார்.
'வதந்தி 2' வெப் தொடர், ஒரு நிரபராதியைக் காப்பாற்றுவதற்காக ஒரு காவல் அதிகாரி போராடும் கதையாக அமைந்துள்ளது. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும். இதனால், சில நாட்கள் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.
சினிமாவில் அனைத்தும் மாறிவிட்டன. ஆனால், 'அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வி மட்டும் இன்னும் மாறவில்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன். ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால், ஒரு வெப் சீரிஸ் ஐந்து மணி நேரம் வரை நீளும். அதனால் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று கூட எனக்கு தோன்றியது.
'வதந்தி 2' படப்பிடிப்பின்போது, நானும் ஒரு இயக்குநர் என்ற அடிப்படையில் சில நேரங்களில் எனது ஆலோசனைகளையும் கூறுவேன். அதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது இயக்குநரின் விருப்பம். இது அவருடைய கதை, அதைப் பற்றிய தெளிவான பார்வை அவருக்குத்தான் இருக்கும்' என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
