திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் என்றும் புகழாரம் சூட்டிய பனையூர் பாபு, தற்போது அவரது அரசியல் நிலைப்பாடுகள் தடம் மாறுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா அறிக்கையில், பனையூர் பாபு, திருமாவளவன் தனது அடிப்படை அரசியல் அறத்திலிருந்து தடம் மாறுவதாகவும், சமீப காலங்களாக அவரது செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் வியப்பையும் வேதனையையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவதாகவும், நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான நிலைப்பாடு என முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நேற்று வரை ஒரு நடிகரை 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை' என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்றும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார். 'விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது' என்று சூளுரைத்தவர், இன்று அவர்களுடனே கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் பயணிக்க இயலாது என தனது மனசாட்சி உணர்த்துவதாகவும், எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுவதாக கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்வதாகவும் பனையூர் பாபு கூறியுள்ளார். இருப்பினும், தான் கட்சியிலிருந்து விலகினாலும், திருமாவளவனிடம் இருந்து கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான தனது பயணம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version