நீட் தேர்வு ரத்து: திமுக, விசிக, இடசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அவசியமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.

சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா போன்றோர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கி.வீரமணி, 'நீட் தேர்வில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது. நீட் தேர்வை ஒழிக்காமல் பாஜக எப்படி ஊழலற்ற அரசு என்று சொல்ல முடியும்? இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, ஒரு மோசடி, சட்டவிரோதம். மாநில உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தினார். விசிக தலைவர் திருமாவளவன், 'நீட் தேர்வு காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. நீட் பயிற்சி நிறுவனங்கள் பெருகி, இது ஒரு வணிகமயமாகிவிட்டது. இதனால் எளிய மக்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வசதியுள்ளவர்களுக்கான படிப்பாக இது மாறிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இப்போது நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார்' என்று குற்றம் சாட்டினார்.

மதுரை, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறையால் மருத்துவக் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version