மிஸ்டர் எக்ஸ் பாடம்: இயக்குநர் மனு ஆனந்த் உருக்கமான அறிக்கை

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் இணைந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்த 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வெளியானது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் போன்ற பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். 'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவான இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் குறித்து இயக்குநர் மனு ஆனந்த் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'மிஸ்டர் எக்ஸ்' படத்தை பார்த்த, ஆதரித்த, விவாதித்த, விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'மிஸ்டர் எக்ஸ்' ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவான திரைப்படம். பொதுமக்கள் ரசிக்கும் வணிக சினிமாவின் பிரம்மாண்டத்தையும், பரபரப்பையும் தக்க வைத்துக் கொண்டு, சற்று மாறுபட்ட கோணத்தில் ஒரு கதையை சொல்ல முயன்ற படைப்பு இது. பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் ஒரு திரையரங்கு அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது.

மேலும், '2026 ஏப்ரல் 17 அன்று படம் வெளியானபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத் தேர்தலின் பரபரப்பான வாரத்தில் நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்பதை அறிந்திருந்தோம். படம் நல்ல விமர்சனங்களையும், நேர்மறையான கருத்துகளையும் பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை. ஒரு படம் ஏன் மக்களுடன் இணைகிறது அல்லது ஏன் வணிக ரீதியாக தோல்வியடைகிறது என்பதைப் பற்றி பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். ஆனால், 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் தோல்விக்கு முழுப் பொறுப்பும் என்னுடையதே. சினிமா ஒரு சக்தி வாய்ந்த, அதே சமயம் கணிக்க முடியாத ஊடகம். ஒவ்வொரு படமும் நமக்கு கதை சொல்லல், பார்வையாளர்கள், சரியான நேரம், நம்மைப் பற்றி என பல மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுத் தருகிறது. 'மிஸ்டர் எக்ஸ்' என் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அந்தப் பாடங்களை மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் எடுத்துச் செல்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version