பாகிஸ்தானில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா நகரில், குல்சான் பிளாசா அருகே அமைந்துள்ள சந்தைப் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழங்குடியினத் தலைவர் மாலிக் தாரிக் என்பவரின் வாகனம் சந்தையைக் கடந்து சென்றபோது, IED எனப்படும் வெடிகுண்டு வெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மாலிக் தாரிக் உயிர் தப்பியுள்ளார். ஆனால், சந்தையில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் உடனடியாக மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.