கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 172,894 பேர் காயமடைந்துள்ளனர். காசா மருத்துவ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்தும், 39 பேர் காயமடைந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மே 28) காசாவில் அகதிகளாக தங்கியிருந்த கட்டிடங்கள் மற்றும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 11 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 922 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 2,786 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், 'ஹமாஸ் அமைப்பை நாங்கள் கடுமையாக நெருக்கி வருகிறோம். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி 50 சதவீதப் பகுதியைக் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது 60 சதவீதப் பகுதியை எங்கள் வசம் கொண்டு வந்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
'என்னுடைய தற்போதைய நேரடி உத்தரவு என்னவென்றால், இந்த எல்லையை 70 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும்' என்றும் நேதன்யாகு கூறினார். மாநாட்டில் பங்கேற்ற மேற்கு கரை ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்கள் '100 சதவீத காசாவையும் கைப்பற்றுங்கள்' என முழக்கமிட்டனர்.
இதற்கு பதிலளித்த நேதன்யாகு, 'வரிசைப்படியாக செல்வோம், முதலில் 70 சதவீதத்தை முடிப்போம்' என்று குறிப்பிட்டார். இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதல்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.