பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்ட போதிலும், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் 'துரந்தர் 2' திரைப்படம் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திற்கும் பாகிஸ்தானில் தியேட்டர்களில் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நெட்பிளிக்ஸில் வெளியான சில நிமிடங்களிலேயே படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியதால், ஓடிடி தளத்தின் சர்வர் செயலிழந்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கிய 'துரந்தர் 1' திரைப்படம் 2025-ல் வெளியானது. ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், பாகிஸ்தானில் இரகசிய உளவாளியாக ஊடுருவும் இந்தியரின் கதையை மையமாகக் கொண்டது. படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான காட்சிகள் இருந்ததால், அந்நாட்டிலும் வளைகுடா நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, 'துரந்தர் 2' மார்ச் 19 அன்று வெளியாகி பெரும் வெற்றியை குவித்துள்ளது. பாகிஸ்தானில் தியேட்டர் வெளியீட்டிற்கு தடை இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியீட்டிற்குத் தடையில்லை. இதனால், இப்படம் பாகிஸ்தான் மட்டுமின்றி பல நாடுகளிலும் நெட்பிளிக்ஸில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சில நாட்களாக இப்படம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இதுகுறித்து மாவியா உமர் பரூக்கி கூறுகையில், 'துரந்தர் 2' வெளியாகும் நேரத்திற்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ஓடிடி தளத்தை அணுகியதால் சர்வர் செயலிழந்தது' என்றார். 'துரந்தர் 2' ஜூன் 4 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகவுள்ளது. அதே சமயம், 'துரந்தர்' படக் கதை மையமாகக் கொண்ட 'லயாரி' பகுதியின் மக்கள், பட லாபத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் போட்டிப் படமான 'மேரா லயாரி' கடந்த 8-ம் தேதி வெளியானது, ஆனால் முதல் காட்சியில் வெறும் 22 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி தோல்வியடைந்தது.