பயங்கரவாதம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஸ்வீடனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கு எதிராக இரு நாடுகளும் தொடர்ந்து போராடும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கோதன்பர்க்கில் நடைபெற்ற தலைமைச் செயல் அதிகாரிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய உலகளாவிய பதற்றமான சூழலில் இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றுபட்டு நிற்கின்றன. கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஸ்வீடன் அளித்த ஆதரவுக்கு பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பயங்கரவாதத்தை வேரறுக்கும் எங்கள் முயற்சியில் நாங்கள் உறுதியாக இருப்போம்,' என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைப்பது, வெறும் வாங்குபவர்-விற்பவர் உறவைத் தாண்டி, நீண்டகால தொழில்துறை கூட்டாண்மையை நோக்கி நாம் நகர்வதைக் காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அவர் பாராட்டினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கப்பட்டது. இது ஸ்வீடன் ஒரு வெளிநாட்டு அரசாங்கத் தலைவருக்கு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும். பிரதமரின் ஸ்வீடன் பயணத்தின்போது வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருது, இந்தியப் பிரதமர் வெளிநாடுகளில் பெறும் 31வது சர்வதேச கௌரவமாகும்.
