200 எம்.பி கேமரா, 6,200 எம்.ஏ.எச் பேட்டரி: மிரட்டலாகத் தயாராகும் ஒப்போ ரெனோ 16 சீரிஸ்; எப்போது அறிமுகம்?
சீனாவில் ஜூன் மாதம் வெளியாகி, இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் உள்ள ரெனோ 15 ப்ரோ மினியின் விலை ரூ.59,999 ஆக இருப்பதால், புதிய மாடலும் இதே பட்ஜெட்டில் வெளியாகலாம்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான ஒப்போ ரெனோ 15 ப்ரோ சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த தலைமுறை மாடல்களான ஒப்போ ரெனோ 16 ப்ரோ, ரெனோ 16 ப்ரோ மினி பற்றிய தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. பிரபல டிப்ஸ்டர் தேபயன் ராய் பகிர்ந்துள்ள தகவல்கள் இந்த போன்களின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
முக்கிய மாற்றங்கள் என்ன?
ரெனோ 15 ப்ரோ மினி மாடலில் ஐபோன் 16 சீரிஸ் போன்ற வட்டமான செவ்வக கேமரா மாட்யூல் இருந்தது. ஆனால் புதிய ரெனோ 16 சீரிஸில், இது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனைப் போன்ற செங்குத்தான பில்-ஷேப் (Pill-shaped) கேமரா அமைப்பிற்கு மாறுகிறது. இதில் 2 சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் ஒரு எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த சீரிஸில் எதிர்பார்க்கப்படும் ஒரு தனித்துவமான அம்சம் ‘பிளஸ் கீ’ அல்லது ‘ஸ்னாப் கீ’. இந்த ஷார்ட்கட் பட்டன் மூலம் ஒரே அழுத்தத்தில் ஏஐ டூல்ஸ், கேமரா மற்றும் முக்கிய ஷார்ட்கட்களை இயக்க முடியும்.
எப்போது அறிமுகம்?
கசிந்துள்ள தகவல்களின்படி, ஒப்போ ரெனோ 16 சீரிஸ் சீனாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெனோ 15 சீரிஸ் வெளியாகி சுமார் 6 முதல் 7 மாத இடைவெளியில் சந்தைக்கு வரும். புதிய மாடல் வருவதற்கு முன்னதாக, தற்போது சந்தையில் உள்ள ரெனோ 15 ப்ரோ மினி மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம். ஆரம்ப விலை ரூ. 59,999, 6.32-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,600 நிட்ஸ் பிரைட்னஸ்), மீடியாடெக் டைமென்சிட்டி 8450 சிப்செட், 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP செல்ஃபி கேமரா, 6,200mAh பேட்டரி (80W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்), IP66 / IP68 / IP69 ரேட்டிங் மற்றும் விண்வெளித் தரத்திலான அலுமினியம் கட்டமைப்பு. ஒப்போ நிறுவனம் இந்த புதிய ரெனோ 16 சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.