உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி வடை, சமோசா, போண்டா போன்ற உணவுப் பண்டங்களை பார்சல் செய்ய செய்தித்தாள்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது.
பல தேநீர்க் கடைகள் மற்றும் சிற்றுண்டி கடைகளில், சூடான பலகாரங்களை பழைய செய்தித்தாள்களில் சுற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என FSSAI எச்சரித்துள்ளது. செய்தித்தாள்களில் உள்ள அச்ச மை, பலகாரங்களில் கலந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்தச் செயல் சட்டப்படி தவறு என்றும், உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தித்தாள் மைகளில் உள்ள ஈயம், சாயங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சூடான உணவில் உருகி கலந்து, தீவிர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்கள் பார்சல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்டால், உடனடியாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையம் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.