2 முதல் 3 கோடி ரூபாய் வரை கொடுத்து மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெறுபவர்கள், கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இத்தகைய மருத்துவர்கள் நமக்கு தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏன் பதவி விலக வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "2, 3 கோடி கொடுத்து சீட் பெறுபவன் கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு போயிடுவான். அப்படிப்பட்ட மருத்துவர் தேவையா?" என்று கடுமையாக சாடினார்.
மேலும், நீட் தேர்வு போராட்டத்தின் போது பாலஸ்தீன நாட்டின் கொடியை கையில் வைத்திருந்தவருக்கு என்ன வேலை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு சுமூகமாக நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் வினவினார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். தமிழக அரசின் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாள்களும் கசிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசத்திற்கு எதிரான டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து, நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
