டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'போராட்டத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் ஒதுங்கியதில்லை' என்று குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் தெலங்கானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில்தான் வினாத்தாள்கள் கசிந்தன என்பதை சுட்டிக்காட்டிய அவர், போராட்டத்துக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு நீதி வழங்குவதாக கூறும் ராகுல்காந்தி, தனது போராட்ட நாடகங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவரது போராட்டங்கள் மாணவர்களுக்கு உதவுவதற்காகவா என்பது சந்தேகமே என்றும் ஜே.பி.நட்டா விமர்சித்தார்.
வினாத்தாள் கசிவு பிரச்சனையை மத்திய அரசு மிகவும் தீவிரமான பிரச்சனையாகவே கருதுகிறது. நாட்டின் எதிர்காலமும், மாணவர்களின் நலனும் முக்கியம் என்பதால், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதை விட நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதே சிறந்தது என அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் எத்தனை மணி நேரம் விவாதம் கோரினாலும் அதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவை என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை கண்டறியப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் ஒரு பொறுப்பான அரசு என்றும், நாடாளுமன்றத்தில் அனைத்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும், இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது முறையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
