புழல் மத்திய சிறைச்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளைத் தடுப்பது குறித்தும், சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற பொருட்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் உள் சந்தைகளை அமைக்கவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிறைச்சாலைகளில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறைச்சாலையில் பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கால அளவைத் தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை நவீனமயமாக்குதல், கண்காணிப்பு கேமராக்களை அதிகரித்தல், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்குத் தேவையான நிதிகளைப் பெற முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உட்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.