உங்கள் வீட்டில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் பொலிவிழந்து காணப்படுகிறதா? இனி கவலை வேண்டாம். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உங்கள் சிங்க்கை மீண்டும் புதுப் பொலிவுடன் ஜொலிக்க வைக்க ஒரு எளிய வழிமுறை உள்ளது.
சமையலறையில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க், நாட்கள் செல்லச் செல்ல அதன் பளபளப்பை இழந்து, நீர்க் கறைகள் மற்றும் மங்கல் தன்மையுடன் காணப்படுவது இயல்பு. எண்ணெய் பிசுக்கு, சோப்பு எச்சங்கள், மற்றும் தக்காளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளின் தாக்கம் ஆகியவை சிங்கின் பளபளப்பைக் குறைக்கும் முக்கியக் காரணிகளாகும்.
பாத்திரங்களைக் கழுவிய பின் சிங்க் ஈரமாக இருப்பதை உலர்த்தாமல் விடுவது, தண்ணீரில் உள்ள தாதுக்கள் படிந்து வெள்ளை நிறப் புள்ளிகளாக மாற வழிவகுக்கும். மேலும், ஸ்டீல் நாரால் கடுமையாகத் தேய்ப்பதோ அல்லது ஸ்டீல் கோடுகளின் திசைக்கு எதிராகத் தேய்ப்பதோ சிறிய கீறல்களை உண்டாக்கி பளபளப்பைக் குறைத்துவிடும்.
ஈரமான ஸ்கிரப்பர்கள் அல்லது இரும்பு பாத்திரங்களை சிங்கிற்குள்ளேயே நீண்ட நேரம் போட்டு வைத்தால், அதில் உள்ள இரும்புத் துகள்கள் ஒட்டி துருப்பிடித்த கறைகளை உருவாக்கும். உப்புத் தண்ணீர், எலுமிச்சை, தக்காளி மற்றும் ப்ளீச்சிங் கெமிக்கல்கள் ஸ்டீலின் பாதுகாப்பு அடுக்கைப் பாதித்து அதன் பொலிவைக் கெடுக்கும்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, வெறும் 2 ரூபாய் செலவில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கொண்டு உங்கள் சிங்க்கை மின்ன வைக்கலாம். இதற்குத் தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன், வெள்ளை வினிகர் – தேவையான அளவு, மென்மையான ஸ்பாஞ்ச் மற்றும் மைக்ரோஃபைபர் துணி.
முதலில், சிங்க் முழுவதும் பேக்கிங் சோடாவைத் தூவி, மென்மையான ஸ்பாஞ்சைக் கொண்டு சிங்கின் 'Grain' கோடுகளின் திசையிலேயே மெதுவாகத் தேய்க்கவும். இதன் மேல் சிறிதளவு வினிகரைத் தெளித்தால், நுரைத்து வரும். இதை 2-3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.
இறுதியாக, உலர் மைக்ரோஃபைபர் துணியால் சிங்க் முழுவதும் துடைத்து, சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது மினரல் ஆயில் தடவினால், நீர் ஒட்டாமல் சிங்க் புதிது போல பளபளக்கும். இந்த எளிய கிச்சன் ஹேக் மூலம் உங்கள் சமையலறை சிங்க் எப்போதும் அழகாக ஜொலிக்கும்.
