திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மாநகர பேருந்து நடத்துனர் ஒருவர், '5 வருஷமா, 4 பேர் வைச்சு ஏமாத்துறாங்க… நீங்களும் ஷூட்டிங் ஆட்சியா மாறிடாதீங்க!' என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், மேம்பாலப் பணியில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்து பேசிய நடத்துனர், 'மேடம் உங்க கால்ல வேணாலும் விழுறேன், அசிங்க அசிங்கமா பஸ்ல பேசுறாங்க காதுல கேட்கவே முடியல.. தயவு செஞ்சு மேம்பாலப் பணிகளை சீக்கிரம் முடிக்க சொல்லுங்க' என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். கடந்த 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம், போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பொதுமக்கள் தரப்பில், இந்தப் பாலம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. 5 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணிகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மாவட்ட ஆட்சியர் கவிதா, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக உறுதியளித்தார். மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.