இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் துக்காலி மண்டலத்தில் அமைந்துள்ளது.
திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'ராயல சீமா பகுதியை ரத்தின சீமாவாக மாற்றும் நடவடிக்கை ஜொன்னகிரியில் தொடங்க உள்ளது. இப்பகுதியை முன்பு ‘சுவர்ணகிரி’ என்று அழைத்தனர்' என குறிப்பிட்டார். மேலும், அசோகச் சக்கரவர்த்தியின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றும், அக்காலத்தில் இங்கு சாலைகளில் ரத்தினக் கற்கள், தங்கம் போன்றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கேஜிஎஃப் (கோலார் தங்கச் சுரங்கம்) குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி, சுத்தம் செய்யப்படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும் என முதல்வர் நாயுடு தெரிவித்தார். தற்போது இங்கு 800 பேர் பணியாற்றுகின்றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்யப்படுவர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.
ஜொன்னகிரி ஆந்திராவின் அடையாளமாக மாறும் என்றும், அங்கு நகைக்கடைகள் அமைக்கப்படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்திராவில் தொழில் தொடங்க பலர் முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்திராவில் அமைகிறது. விரைவில் கர்னூலில் உயர் நீதிமன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்சாலை அமையும் என்றும் அவர் உறுதியளித்தார்.