நமது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வகையில், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நல்ல கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தப் பதிவில், எந்தெந்த உணவுப் பொருட்களில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது என்பதை விரிவாகக் காண்போம்.
ஓட்ஸ், தினை, பார்லி போன்ற தானிய வகைகளில் பீட்டா குளுகன் என்ற சத்து உள்ளது. இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்கும் திறன் கொண்டது. மேலும், பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இந்தப் பொருட்கள் இதயத்தைப் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கொழுப்புக் கட்டிகள் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.
பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளையும் நமது அன்றாட உணவில் சரியான அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை உற்பத்தி செய்வதோடு, இதயத்திற்கும் நன்மை பயக்கின்றன. இவற்றில் நார்ச்சத்து மற்றும் தாதுக்களும் அதிகம் உள்ளன.
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் கொழுப்பைக் குறைக்கும் சக்தி வாய்ந்தவை. பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற வேதிப்பொருள் நமது இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், பெரிஸ் வகைப் பழங்களான சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நமது இதயத்திற்கு மிகுந்த நலம் சேர்க்கும்.