தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி தரப்பு மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என பிளவு ஏற்பட்டது. இந்த சூழலில், அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியல் மற்றும் குதிரை பேர கலாசாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இதற்கு தவெக தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவு எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளம் வழியாக பதிலடி கொடுத்துள்ளது.
தவெகவின் பதிவில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தான் கொடுக்க முடியும் என்பதை அறியாத ஒருவர், பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ய சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் வர வேண்டும். இதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டாம். தொடர் தோல்விகளால் புலம்பாதீர்கள். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்கள் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைக்க அரசு மற்றும் நமது கழகத்தின் மீது பழி போடுகிறது. உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் உங்கள் தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை சந்திக்க துணிவோடு வந்துள்ளனர். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரிக்கிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!' என்றும் தவெக தனது பதிலில் தெரிவித்துள்ளது.
