கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளதன் மூலம், லட்சக்கணக்கான பக்தர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பக்தர்களையும் பாதிக்கும் இந்த நடைமுறையை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வீ லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டதாவது: "கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதே கோவில் நிர்வாக விதிமுறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திடீர் கட்டுப்பாடுகள் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆன்மிக பயணங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவில் நிர்வாகங்கள் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
