புதுடெல்லி: ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவுக்கு முன் மோடி அரசு பணிந்து போனதற்கான விலையை, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு மூலமாக ஒட்டுமொத்த தேசமும் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளது.
முதலில், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்தியது. பின்னர், போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா, இந்தியாவிற்கு ஒரு மாதம் விலக்கு அளித்தது. இந்த விலக்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாடு மீண்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை அமெரிக்காவிடம் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நாட்டின் நலனை முன்னிறுத்தி தானே ஒரு முடிவை எடுப்பதற்கு பதிலாக, பிரதமர் மோடி அரசு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பணிந்து போய், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு மீண்டும் அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை பணயம் வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.