தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 27 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது டெல்லி மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இருப்பினும், 26 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.
குறைந்தது 10 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும் என நம்பியிருந்த பாஜக தலைமைக்கு, இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய, தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் அடங்கிய 'உண்மை கண்டறியும் குழு' ஒன்றை அமைக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மாநிலத் தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பாஜக 24 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 11.24 ஆக உயர்ந்தது. ஆனால், நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் செயல்பாடு குறைந்து மந்தநிலை ஏற்பட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். அண்ணாமலை மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என பலர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும்.