சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், குத்தம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களைத் தொடர்ந்து, குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை நகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி, காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதலில் 150 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இதன் பணிகள், காவல் நிலையம், பணிமனை, குளிர்சாதன வசதி என பல்வேறு தேவைகளுக்காக 427 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி வாகன வசதி, நகரும் படிக்கட்டுகள், உணவகம், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கும் இடம், கழிவறை வசதிகள், இருசக்கர மற்றும் கார்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள், காவல் நிலையம், மருந்தகம், சிகிச்சை மையம் என அனைத்தும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வசதியும், வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு தனித்தனி நடைமேடைகளும் உள்ளன. மேலும், 1,680 இருசக்கர வாகனங்கள் மற்றும் 235 கார்களை நிறுத்தும் வசதியும், 41 கடைகளும், கட்டுப்பாட்டு அறையும், 6 இடங்களில் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் உட்புறம் முழுவதும் விமான நிலையம் போன்று அழகிய வண்ணப் படங்களுடன் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 300 மாநகர பேருந்துகள், 600 மாநகரப் பேருந்துகள், அண்டை மாநிலப் பேருந்துகள் என மொத்தம் 986 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார நாட்களில் 30 ஆயிரம் பயணிகளும், விடுமுறை நாட்களில் 40 ஆயிரம் பயணிகளும், திருவிழாக் காலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்யும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துடன் இது இணைக்கப்படுவதால், பயணிகள் எளிதாக இந்த முனையத்தை அடைய முடியும். சட்டமன்றத் தேர்தலால் திறப்பு விழா தள்ளிப்போனது. புதிய ஆட்சி அமைந்துள்ளதால் விரைவில் திறப்பு விழா நடத்தப்படும். இந்தப் பேருந்து நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.