சென்னை துறைமுகத்தில் அதிரடி சோதனை நடவடிக்கையின் போது, 46,000க்கும் மேற்பட்ட சீனப் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. இதனால், இந்தியப் பட்டாசு உற்பத்தியாளர்களும், பட்டாசு ஆலை தொழிலாளர்களும் வருவாய் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு கடத்தல்காரர்கள் சீனப் பட்டாசுகளை இந்தியாவுக்குள் கடத்தி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தலை முறியடிக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் கப்பல் மூலம் சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்குள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்குநகர அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், துறைமுகத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீனாவில் இருந்து வந்த 40 அடி நீளமுள்ள கொள்கலன்கள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆவணங்களின்படி, அவற்றில் தெளிப்பான்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், விரிவான சோதனையின்போது, 46,000க்கும் மேற்பட்ட பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட மற்றொரு நடவடிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 18.7 மெட்ரிக் டன் பட்டாசுகளைக் கடத்தி வந்த கடத்தல் கும்பலை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.