சென்னையை அடுத்த எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் மற்றும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் ஆகாஷ் (20), புழல் சூரப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பலராமன் மகள் கிருத்திகா (21), அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால், ஆகாஷ், கிருத்திகா மற்றும் அவர்களது நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஆகாஷ், கிருத்திகா மற்றும் மற்றொரு நண்பர் என மூவர் கடலில் குளித்துள்ளனர். மற்ற இருவரும் கரையில் நின்று, அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்' எடுப்பதற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்து வந்துள்ளனர்.
திடீரென எழுந்த ராட்சத அலை, கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் கிருத்திகாவை இழுத்துச் சென்றது. இதைக் கண்ட அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக, அங்கு மீன்பிடி வலைகளை சீரமைத்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் பாய்ந்து, போராடி கிருத்திகாவை பத்திரமாக கரைக்கு மீட்டனர்.
கரைக்கு கொண்டு வரப்பட்ட கிருத்திகாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட ஆகாஷை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தீவிரமாக தேடி வந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆகாஷின் உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளில் கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள் இவ்வாறாக உயிரிழந்தது மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
