மேட்டூர் அணையை திறக்காதது, மேகதாது விவகாரத்தை டெல்லியில் பேசாதது, ஒரு முனை மின்சாரத்துக்கே வழியில்லாத நிலையில் மும்முனை மின்சாரம் எப்படி சாத்தியம்? என திமுக விவசாய அணி கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு விவசாயம் மேம்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நீர்மேலாண்மையிலும் அனுபவமில்லாத தற்போதைய அரசு அதை கடைபிடிக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளது. வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த திராவிட மாடல் அரசின் திட்டங்களை போல அல்லாமல், தற்போது வெற்று அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ள குருவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பது போல உள்ளது' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
'தமிழ்நாட்டின் விவசாயப்புரட்சி மற்றும் விவசாயிகளின் பொற்காலம் திமுக ஆட்சிகாலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த அதிமுக ஆட்சியில், விவசாய மின்சார கட்டணம் 13 பைசாவிலிருந்து 14 பைசாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் போராடியது. 1980 டிசம்பர் 31 அன்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 விவசாயிகள் பலியாகினர். அதனை தொடர்ந்து 1989 இல் முதலமைச்சராக பொறுப்பேற்ற முத்தமிழ் அறிஞர், இனி விவசாயிகள் வேளாண்மைக்கு பயன்படும் மின்சாரத்திற்கு ஒரு பைசா கூட கட்டணம் கட்டவேண்டாம் என இலவச மின்சாரம் வழங்கினார். மேலும் 2006 இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் 22.4 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு ரூ 7000 கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழ்நாட்டின் அனைத்து விவசாயம் சார்ந்த மாவட்டங்களிலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டங்கள், காவிரி மீட்பு பேரணி என பல விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக செய்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, சோழர்கள் ஆட்சிக்கு பின்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள், கடைமடைப் பகுதி வரையிலான நீர் பாசனம், வேளாண் மையங்களில் போதுமான இருப்பு, அதிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு என இவையெல்லாம் வேளாண் வளர்ச்சியை தமிழ்நாட்டை உயர்ந்த மாநிலமாக உயர்த்திக்காட்டியது. ஆனால், குளிரூட்டப்பட்ட கேரவனுக்குள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், தற்போது விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறியாமல் குருவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சாரத்தை அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தனது ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்ற பயத்தில் மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள், திட்டங்களை மட்டுமே அறிவித்து 'ரீல்ஸ் போடுங்கள் ஆட்சி தொடர்ந்துவிடும்' என்ற கொள்கையோடு ஆட்சி நடத்துகிறார்கள். ஆனால் கடந்த கழக ஆட்சியின்போது நிர்வாகத் திறனால், 2021 இல் இருந்த 32,595 மெகாவாட் மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு, மாநிலத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. மூன்றாண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க ஆணையிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கழக ஆட்சியில் நெல் உற்பத்தி பல புதிய உச்சங்களை எட்டியது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 42 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.