தன்னுடைய பதவியை ஏற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும், இதில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்றும் அதிமுக எம்பி தனபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'தவெக-விற்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத சூழலில், பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்ததாக தகவல் வந்துள்ளது. ஜனநாயகத்தைக் காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர். மேலும், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். மேலும், ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள், பழனிசாமி அணிக்கு மாறினர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆகக் குறைந்தது. ஒருவழியாக அதிமுக உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
