சூரியக் கட்சியின் முக்கிய சீனியர் ஒருவர், இந்த முறை எப்படியோ தலைமைடம் கெஞ்சி தனது சீட்டை உறுதிசெய்துள்ளார். ஆனால், விசில் அலையில் மூன்றாமிடம் வருவோம் என அவர் கனவிலும் நினைக்கவில்லையாம். தனது சொந்த தொகுதியில் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணத்தை வாரி இறைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், விசில் அலையின் தாக்கம் அவரிடமிருந்தும் தப்பவில்லை.
'நம்ம தொகுதிக்காக இவ்வளவு செய்தும், நாம் கரை சேர முடியாத அளவுக்கு கள யதார்த்தம் மோசமாக இருக்கிறதே. ஒருவேளை, அவர் (தலைவர்) ஜெயித்து நாம் தோற்றிருந்தால், 'உங்களுக்கு சீட் தரமாட்டேன்னு சொன்னோம்' என்று ஆரம்பித்திருப்பார்' என அப்பாவும், அருமை மகனும் தங்களுக்கே சமாதானம் சொல்லிக் கொண்டு நிம்மதி அடைந்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால், தற்போது பூத் வாரியான 'பட்டுவாடா' பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு, 'இவ்வளவு பணம் இங்கே செலவழித்தும், அதற்கேற்ற வாக்குகள் வரவில்லையே' என கட்சி நிர்வாகிகளை 'ஹேப்பி' மகன் கடுமையாகக் கிண்டி எடுத்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாவட்டங்களில் ஒரு முக்கிய ராஜ குடும்பத்தினரின் மாண்புமிகு சம்பவமும், அதன் பின்னணியில் உள்ள உள்குத்துகளும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்த சீனியரின் தொகுதி தோல்விக்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.