தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.
தற்போது முதல்-அமைச்சர் விஜய்க்குப் பிறகு 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர். இதனால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க வாய்ப்புள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் போன்ற துறைகளும், ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை, ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை, அருண்ராஜுக்கு சுகாதாரம், செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபமையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை போன்ற பல முக்கிய துறைகள் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகளும் விரைவில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
