கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த பெண், இயற்கை உபாதை காரணமாக பேருந்தை நிறுத்தக் கோரியுள்ளார். ஆனால், பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் மறுத்ததால், கோபமடைந்த அந்தப் பெண், பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியலால் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காவு பகுதியில் அரசு பேருந்தில் பயணித்த பெண், தான் இறங்க வேண்டிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பேருந்தை நிறுத்தும்படி நடத்துனரிடம் கேட்டுள்ளார். ஆனால், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பதால் நடத்துனர் மறுத்துவிட்டார். தொடர்ந்து, ஓட்டுநரிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தும் அவர் நிறுத்தாமல் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்களை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்தில் அவசரகால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சுத்தியலை எடுத்த அந்தப் பெண், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் உடனடியாக பேருந்து பணிமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கசபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண், 'ஆத்திரத்தை அடக்கலாம், ஆனால் இயற்கை உபாதையை அடக்க முடியாது. கழிவறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தான் பேருந்தை நிறுத்தக் கோரினேன். ஆனால், யாரும் கேட்கவில்லை. வேறு வழியின்றி ஜன்னலை உடைத்தேன். இதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். சேதமடைந்த கண்ணாடிக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீட்டுத் தொகையாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

