திமுக கூட்டணியில் தொடர்கிறோம் – திருமாவளவன் விளக்கம்!

திமுக, அதிமுக அணிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடந்ததாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 'என்னை முதலமைச்சராக்க முயற்சி நடந்தது உண்மைதான். திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கவும், அப்போது எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும், என்னை துணை முதலமைச்சராகவும் கொண்டுவர முயற்சி நடந்தது. ஆனால், இதை நான் விரும்பவில்லை. இது நல்ல முயற்சி அல்ல' என்று கூறினார்.

மேலும், 'திமுக அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்தார். இது சாத்தியமா என்று விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆவது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். திமுகவோ, அதிமுகவோ எங்களை அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுகுறித்து விளக்கமளித்த திருமாவளவன், 'தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க மட்டுமே தற்போது ஆதரவு அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே த.வெ.க.விற்கு ஆதரவு. 2 சீட்டுகளை வைத்துக்கொண்டு யாருடனும் நாங்கள் பேரம் பேசவில்லை. த.வெ.க மீதான எங்கள் மதிப்பீடு அப்படியேதான் உள்ளது. தற்போதும் நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்தான் தொடர்கிறோம்' என்று திட்டவட்டமாக கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version