தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விட அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முயன்றது. அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் வேட்பாளர் ஜோசப் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். மேலும், 2 வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், ஆளுநர் இதை ஏற்கவில்லை. இன்று (13ஆம் தேதி)க்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி, கடந்த 10ஆம் தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தமிழக சட்டசபையில், தமிழக வெற்றி கழகத்தின் பலம் 108லிருந்து 106 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்துள்ளார். மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால், சட்டசபையில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களின் எண்ணிக்கை 106 ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 119 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் போதுமானது என்ற நிலையில், தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த முக்கிய சோதனையை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிவார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பு நடத்துவார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். மொத்தம் உள்ள 6 வரிசைகளில், பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வாக்கெடுப்பு நடக்கும்போது அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதில் சரி பாதிக்கு மேல் ஒன்று கூடுதலாக பெற்றால் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். தற்போதைய நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை உள்ளது.
இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றி கழக அரசுக்கு கூடுதல் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய முக்கிய சோதனையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டவுடன் இந்தத் தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
