திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மலக்கழிவுகள் கலக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: "பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலந்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது. முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அரசு துறையின் பெயரை மட்டும் மாற்றினால் மாற்றம் பிறக்காது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மக்கள் அருந்தும் குடிநீரில் மலக்கழிவுகள் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் புனிதமான பள்ளியில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, சமூக நீதித்துறை என துறையின் பெயரை மட்டும் மாற்றினால் போதாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும்" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

