காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் உள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கண்ணாடி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட்-கோபைன் நிறுவனத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மிதவைக் கண்ணாடி (Float Glass), பூசப்பட்ட கண்ணாடி (Coated Glass), லேமினேட் செய்யப்பட்ட கண்ணாடி (Laminated Glass) மற்றும் தீ-எதிர்ப்பு, உயர்-பாதுகாப்பு கொண்ட கண்ணாடி உற்பத்தி செயல்முறைகள் குறித்து அந்நிறுவன உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, ரோபோட்டிக் இயந்திரங்கள் மூலம் கண்ணாடி உற்பத்திப் பொருட்கள் கையாளப்படும் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.
மேலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி அளித்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கோபைன் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட 'கற்றுக்கொண்டே சம்பாதிப்போம்' பயிற்சி முன்னெடுப்பு குறித்தும், அங்கு மாணவர்கள் கற்றுக்கொள்வது, பட்டயம் பெறுவது மற்றும் பணி வாய்ப்புகளைப் பெறுவது குறித்த வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்நிறுவனத்தின் இயற்கை நிலைத்தன்மை முன்னெடுப்புகளான மழைநீர் சேகரிப்பு மையம், நகர்ப்புறக் காடு வளர்ப்பு, வண்ணத்துப்பூச்சித் தோட்டம் மற்றும் 4.0 தொழில் புத்தாக்கச் சிறப்பு மையம் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். முதலமைச்சரின் வருகையை நினைவுகூரும் வகையில் கண்ணாடித் தகட்டில் கையொப்பமிட்டு, மரக்கன்று நட்டு, மகளிர் ஊழியர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகை தந்த முதலமைச்சர், கார் உற்பத்திக்கான உதிரி பாகங்கள் பொருத்தும் பிரிவு மற்றும் தரம் உறுதிப்படுத்தும் பிரிவுகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீண்ட சோதனைப் பாதைக்கான (Long Test Track) புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சொந்த விருப்பத்தின் பேரில், தடம் 3 மற்றும் 4 வழியாக இயக்கி, அதன் செயல்திறனை ஆய்வு செய்தார்.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்திலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொழில் துறை அமைச்சர் மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து முதலமைச்சர் நேரடியாக கள ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். குறிப்பாக, தானியங்கி வாகன உற்பத்தி மற்றும் சிறப்பு கண்ணாடிகள் தயாரிப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் இந்த திடீர் கள ஆய்வு, தொழில்துறையினர் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மாநிலத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் இந்த ஆய்வுகள் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

