அக்டோபர் 15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என வெளியான செய்தி, பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜிபே (GPay) மூலம் ரூ.2000க்கு மேல் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தனிநபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (P2P) எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்கள் நண்பருக்கோ அல்லது வேறு ஒரு தனிநபருக்கோ ஜிபே அல்லது வேறு ஏதேனும் யுபிஐ செயலி மூலம் ரூ.2000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அனுப்பும்போதும், பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படாது. இந்த விதி ஜிபேக்கு மட்டுமல்லாமல், அனைத்து தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்பதை MDR பாலிசி உறுதி செய்துள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் புதிய யுபிஐ விதிகள் அமல்படுத்தப்பட்டாலும், அவை தனிநபர் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது. எனவே, ரூ.2000 அல்லது அதற்கு மேல் எவ்வளவு தொகையை நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது தெரிந்தவர்களுக்கு ஜிபே அல்லது பிற யுபிஐ செயலிகள் வழியாக அனுப்பும்போதும், அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகிய இரு தரப்பினருக்கும் எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது. தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
மேலும், உங்களுக்கென இரண்டு அல்லது மூன்று யுபிஐ கணக்குகள் இருந்து, அதில் ஜிபே வழியாக உங்களுக்கு நீங்களே பணம் அனுப்பிக் கொண்டாலும் (Self Transfer), அதற்கான யுபிஐ கட்டணம் விதிக்கப்படாது. உங்கள் வங்கி கணக்கு மற்றும் தினசரி யுபிஐ பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அல்லது தனிநபர் கணக்கிற்கு நீங்கள் ஜிபே வழியாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எந்தக் கட்டணமும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்.
ஜிபே உட்பட எந்த யுபிஐ பிளாட்பார்மும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக உங்களிடம் கட்டணங்கள் வசூலிக்காது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் குறிப்பிட்ட தொகை என்று வரையறுக்கப்படாமல் முற்றிலும் இலவசமாகவே இருக்கும்.
புதிய விதிமுறைகளின்படி, ரூ.2000க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், திருத்தப்பட்ட வணிகர் தள்ளுபடி விகிதக் கட்டமைப்பு (Merchant Discount Rate – MDR) படி வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படும். இது தனிநபர் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது. எனவே, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.

